கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தாய், மகள் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 10 பவுன் நகையை மீட்டனர்.
கிருஷ்ணகிரி பாஞ்சாலியூர் யாசின் நகரைச் சேர்ந்தவர் எல்லம்மாள் (48). இவரது மகள் சுசிதா (12). மகன் பெரியசாமி. சுசிதா அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில், கடந்த 27-ம் தேதி வீட்டில் எல்லம்மாள், சுசிதா ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது தொடர்பாக, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின் பேரில், ஏடிஎஸ்பி-க்கள் சங்கர், நமச்சிவாயம் மேற்பார்வையில், டிஎஸ்பிக்கள் முரளி (கிருஷ்ணகிரி), ஆனந்தராஜ் (தேன்கனிக்கோட்டை) ஆகியோர் தலைமையில் 8 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவு மற்றும் செல்போன் டவரில் பதிவான செல்போன் எண்கள் மூலம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், காவேரிப்பட்டணம் மோட்டூர் குரும்பட்டியைச் சேர்ந்த நவீன்குமார் (23), சத்தியரசு (24) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் அப்பகுதியில் வந்து சென்றது தெரிந்தது. இதையடுத்து, 3 பேரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, “எல்லம்மாளிடம், சத்தியரசு வட்டிக்கு ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அப்பணத்தை அவரால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இவர்களிடேயே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால், தனது நண்பர்களுடன் வந்து தாய் மற்றும் மகளை கொலை செய்து 10 பவுன் தங்க நகையை திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. கைதான 3 பேரிடமிருந்து கத்தி, இருசக்கர வாகனம், 10 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது” என்றனர்.