சென்னை: காதல் விவகாரத்தில் இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்து உடலை கூவம் ஆற்றில் வீசிச் சென்ற சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். சென்னை மேத்தா நகர் பாலத்தின் கீழே கூவம் ஆற்றில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் சடலம் கிடப்பதாக சேத்துப்பட்டு போலீஸாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. உடனே விரைந்து சென்ற போலீஸார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணையில் அந்த இளைஞர் கொளத்தூரை சேர்ந்த சாய்நாத்(24) என்பதும், அவர் கொலை செய்யப்பட்டு இறந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில் சாய்நாத்தை கொலை செய்தது, செனாய் நகரைச் சேர்ந்த அன்பரசன்(18) மற்றும் அவரது நண்பர்கள் பரத்(20) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைதுசெய்த போலீஸார், அவர்களிடம் நடத்திய விசாரணை குறித்து கூறியதாவது: சாய்நாத்தும், அன்பரசனும் நண்பர்கள். சாய்நாத் மீது திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அன்பரசன் வீட்டுக்கு சாய்நாத் சென்று வந்தபோது, அன்பரசனின் சகோதரியுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர். காதல் விவகாரம் அன்பரசனுக்கு தெரிய வந்ததையடுத்து, இருவரையும் அன்பரசன் கண்டித்துள்ளார். இருப்பினும் இவர்கள் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அன்பரசன் தனது நண்பர்களான பரத் மற்றும் 17 வயது சிறுவனுடன் சேர்ந்து, கடந்த 26-ம் தேதி சாய்நாத்தை தனியாக அழைத்துச் சென்று மிரட்டினர். அப்போது, ஏற்பட்ட தகராறில் அன்பரசன், தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் குத்தி சாய்நாத்தை கொலை செய்து, கூவம் ஆற்றில் வீசிச் சென்றுள்ளார்.
இவ்வாறு போலீஸார் கூறினர்.