சென்னை: சினிமாத் துறை கேமரா உதவியாளரைத் தாக்கி பணப்பறிப்பில் ஈடுபட்ட பொறியியல் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சாலிகிராமம், பெரியார் தெருவில் வசிப்பவர் ரெக்ஸன் (25). சினிமா துறையில் கேமரா உதவியாளராக வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் அதிகாலை கோயம்பேடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், ரெக்ஸனை தாக்கிவிட்டு அவரிடமிருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பினார்.
சுதாரித்துக் கொண்ட ரெக்ஸன், வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை மடக்கிப் பிடித்தார். பின்னர் அந்த வழியாக வந்த கோயம்பேடு ரோந்து போலீஸாரிடம் ஒப்படைத்தார். போலீஸார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் பிடிபட்டது மதுரவாயலைச் சேர்ந்த ஹரிஹரன் (22) என்பதும், அவர் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்துவருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.