சென்னை: போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பணி, எந்தவொரு தனி மனிதருக்கோ, நிறுவனத்துக்கோ வழங்கப்படவில்லை.
பணியாளர்கள் தேவையின்போது அதற்கான முன் அறிவிப்பு www.chennaimetrorail.org/careers என்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். இதுதவிர தமிழ், ஆங்கில நாளிதழ்கள், வேலைவாய்ப்பு செய்தித்தாள்களில் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.
இந்நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள் இருப்பதாக இணையதளத்தில் பொய் செய்தி வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுபோன்ற பொய் செய்தி, விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். அதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொறுப்பேற்காது.