க்ரைம்

ஏர்வாடியில் பள்ளி மாணவர்கள் மோதல்: அரிவாளால் வெட்டப்பட்டதில் இருவர் காயம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே பள்ளி மாணவர்கள் இருவரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

ஏர்வாடி அருகே டோனாவூர் பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் வடுகச்சிமதில் பகுதியைச் சேர்ந்த மாணவனுக்கும், மேலச்செவல் பகுதியைச் சேர்ந்த மாணவனுக்கும் நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டுள்ளது. குடும்பம் குறித்து இருவரும் ஒருவரை ஒருவர் தரக்குறைவாக பேசியதால் இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து தகவல் தெரியவந்ததும் வகுப்பு ஆசிரியர் இருவரையும் அழைத்து அறிவுரை கூறியதோடு சமாதானமாக செல்ல வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், நேற்று அவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டது. அதில், மேலச்செவல் பகுதி மாணவர் அரிவாளால் வெட்டப்பட்டார். இதை தடுத்த மற்றொரு மாணவருக்கு லேசாயன காயம் ஏற்பட்டது. வடுகச்சிமதில் கிராமத்தை சேர்ந்த மாணவர் தனது புத்தகப்பையில் சிறிய அளவிலான அரிவாளை வீட்டில் இருந்து எடுத்துவந்து வெட்டியதாக தெரிகிறது. அரிவாள் வெட்டுப்பட்ட மாணவர் ஏர்வாடியிலுள்ள தனியார் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஏர்வாடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்கள்.

இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஏர்வாடி காவல் நிலைய சரகத்தில், டோனாவூரில் செயல்பட்டு வரும் மேல்நிலைப்பள்ளியில், 9-ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களுக்கிடையில் வகுப்பறையில் ஏற்பட்ட வாய் தகராறின் தொடர்ச்சியாக, நேற்று காலை ஒரு மாணவன் அரிவாளால் மற்றொரு மாணவனை முதுகில் தாக்கிய சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இதனை தடுக்க முயன்ற அருகில் இருந்த தாக்குதல் நடத்திய மாணவனின் சமூகத்தைச் சார்ந்த மற்றொரு மாணவருக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் உடனடியாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் இரண்டு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட வாக்குவாதத்தின் தொடர்ச்சியாக நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT