சென்னை: பாதி விலையில் தங்கம் தருவதாக கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து ரூ.60 கோடி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தலைமறைவாக இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை முகப்பேரை தலைமையிடமாகக் கொண்டு ஏஆர்டி ஜுவல்லர்ஸ் மற்றும் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் பாதி விலையில் தங்கம் தருவதாகவும், ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் வாரம் 3 சதவீதம் வட்டி உட்பட பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை விளம்பரப்படுத்தியது.
இதை நம்பி ஏராளமானோர் இந்த திட்டத்தில் சேர்ந்தனர். மேலும், இந்நிறுவனம் தமிழகம் முழுவதும் கிளைகளை நிறுவி கோடிக்கணக்கில் முதலீடுகளைக் குவித்தது. ஆனால், உறுதியளித்தபடி நடந்துகொள்ளாமல் ரூ.60 கோடிவரை மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிறுவனத்தை நடத்தி வந்த சகோதரர்கள் உட்பட பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த புழல் பகுதியைச் சேர்ந்த பானுவள்ளி (56), சந்தோஷ் (35), அம்பத்தூரைச் சேர்ந்த சுஜாதா (51), ஆவடியைச் சேர்ந்த திவ்யா (36) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும், இந்த நிறுவனம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் தெரிவிக்கலாம் என போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.