ஜெயராஜ் | ராம்குமார் - கைது செய்யப்பட்டவர்கள் 
க்ரைம்

ஓய்வு பெற்ற விளையாட்டுத் துறை பெண் அதிகாரியிடம் ரூ.2.49 கோடி ‘ஆன்லைன் வர்த்தக’ மோசடி - 2 பேர் கைது

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் ஓய்வுபெற்ற விளையாட்டுத் துறை பெண் அதிகாரியிடம் ரூ.2.49 கோடி மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒன்றில் டென்னிஸ் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் அண்மையில் ஆன்லைன் முதலீட்டு விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த `இரட்டிப்பு லாபம்' என்ற வாக்குறுதியை நம்பி அவர்களை தொடர்பு கொண்டுள்ளார்.

பின்னர், அந்த நபர்கள் வழிகாட்டிய ஆன்லைன் முதலீட்டு தளத்தில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை ஆன்லைன் மூலம் ரூ.2.49 கோடி முதலீடு செய்துள்ளார். ஆனால் உறுதியளித்தபடி லாபம் கிடைக்கவில்லை. இதையடுத்து முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்ற போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் பல்வேறு காரணங்களைக் கூறி, பணத்தை திரும்ப எடுக்க முடியாமல் மேலும் பணத்தை முதலீடு செய்யும் படி வற்புறுத்தினர்.

இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார். இதையடுத்து காவல் ஆணையர் அருண் உத்தரவுப்படி, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ராதிகா, சைபர் க்ரைம் துணை ஆணையர் ஶ்ரீநாதா மேற்பார்வையில், அப்பிரிவு உதவி ஆணையர் ராகவி தலைமையில் ஆய்வாளர் மேனகா விசாரணை மேற்கொண்டார்.

இதில் மோசடி கும்பல் ஆன்லைன் வர்த்தகம் மூலம் மோசடி செய்த பணத்தை திருப்பூரைச் சேர்ந்த ஜெயராஜ் (32), தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் (32) ஆகியோரின் வங்கிக் கணக்குகள் மூலம் பெற்று, வேறு வங்கிக் கணக்குக்கு மாற்றி எடுத்தது தெரியவந்தது. இந்த இருவரும் கமிஷன் தொகை பெற்றுக் கொண்டு அவர்களது வங்கிக் கணக்கை மோசடி கும்பல் கையாள அனுமதித்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 3 செல்போன்கள், பாஸ் புக், காசோலை, ஏடிஎம் கார்டுகள் மற்றும் அடையாள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மோசடிக்கு மூளையாகச் செயல்பட்டு வெளிநாட்டில் பதுங்கி உள்ள கும்பலை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

காவல் ஆணையர் எச்சரிக்கை: அதிக லாபம் தரும் முதலீட்டு விளம்பரங்கள், போலி முதலீட்டுச் செயலிகள், வலைத்தளங்கள் குறித்து பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தங்களின் வங்கிக் கணக்குகளை பிறரின் பயன்பாட்டுக்கு விடக்கூடாது. தெரியாத நபர்களின் கோரிக்கையை ஏற்று வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்ற வேண்டாம். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பொதுமக்கள் யாரேனும் இதுபோன்று இணையவழி குற்றத்தால் பாதிக்கப்பட்டது தெரியவந்தால் உடனடியாக தேசிய இணையவழி குற்றத்தடுப்பு உதவி எண் 1930-க்கு தொடர்புகொண்டு விவரங்களை தெரிவிக்க வேண்டும் அல்லது இணையவழி மூலமாக புகார் செய்ய https.www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம்.

SCROLL FOR NEXT