க்ரைம்

திருவாரூர்: சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 9 பேர் கைது

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு, 2 மாதத்துக்கு முன்பு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக, மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம், அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றுக்கு மருத்துவமனை மூலம் அளிக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பந்தப்பட்ட சிறுமியிடம் காவல் ஆய்வாளர் அகிலாண்டேஸ்வரி விசாரணை நடத்தினார்.

விசாரணையில், சிறுமிக்கு 13 வயது இருக்கும்போது அவரது தாயார் இறந்துவிட்டார். தந்தையும் குடிப் பழக்கத்துக்கு அடிமையானதால், கவனிக்க யாரும் இல்லாததால், பள்ளிப் படிப்பை 8-ம் வகுப்புடன் நிறுத்தி உள்ளார். இந்த சூழலில், சிறுமிக்கு அறிமுகமான 45 வயது பெண்மணி, தஞ்சாவூரில் வேலை வாங்கி தருவதாகக் கூறி சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார்.

இதனால், சிறுமி கர்ப்பம் அடைந்ததை அறிந்த அந்த பெண், சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க முயன்றுள்ளார். ஆனால், அது முடியாது என தெரிந்த பின்னர், சிறுமியை அவரது வீட்டுக்கு அனுப்பியுள்ளார். பின்னர், சிறுமிக்கு மன்னார்குடி மருத்துவமனையில் பிரசவமானது.

இதையடுத்து, அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியிடம் இருந்த செல்போனை கைப்பற்றி, அதில் இருந்த எண்களின் அடிப்படையில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வடக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் (32), தினேஷ் 30), திருமங்கலக்கோட்டை சக்திவேல் (35), ராஜ்குமார் (25), வாட்டாக்குடியைத் சேர்ந்த விக்னேஷ் (23), தவக்கல் பாட்ஷா (59), பெண் புரோக்கர்கள் ஆடுதுறை ராதிகா (35), தஞ்சை விளார் சாலை மலர்கொடி (42) ஆகிய 9 பேரை செப்.22-ம் தேதி இரவு கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள ஒரு பெண்ணை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT