க்ரைம்

குடியாத்தத்தில் 4 வயது குழந்தை காரில் கடத்தல் - 2 மணி நேரத்தில் மீட்ட காவல் துறை!

செய்திப்பிரிவு

குடியாத்தத்தில் தந்தை மீது மிளகாய் பொடியை தூவி 4 வயது குழந்தையை மர்ம நபர்கள் காரில் கடத்தினர். போலீஸார் 7 தனிப்படைகளை அமைத்து தேடுதல் பணியை துரிதப்படுத்திய நிலையில் மாதனூர் அருகே குழந்தையை மர்ம நபர்கள் விட்டுச் சென்றனர். பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை பவளக்கார தெருவைச் சேர்ந்தவர் வேணு (33). இவரது மனைவி ஜனனி. இவர்களின் மகன் யோகேஷ் (4). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யோகேஷ் எல்.கே.ஜி படித்து வருகிறார். வேணு, வீட்டில் இருந்தபடி ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

வழக்கம் போல் மகன் யோகேஷை பள்ளியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் நேற்று பகல் 12.30 மணியளவில் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் யோகேஷ். அப்போது, வேணுவின் வீட்டின் அருகே நின்றிருந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட வெள்ளை நிற காரில் இருந்து ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் கீழே இறங்கியுள்ளார்.

அவர், திடீரென வேணுவின் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு வாசலில் நின்றிருந்த குழந்தையை கடத்திக் கொண்டு தயாராக இருந்த காரில் தப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த வேணு, குழந்தையை மீட்க சிறிது தொலைவு காரில் தொங்கியபடி வேணு சென்ற நிலையில் அவரால் மீட்க முடியாமல் கீழே விழுந்தார். அதற்குள், அந்த தெருவில் இருந்து கார் மின்னல் வேகத்தில் பறந்தது. இந்த தகவலால் கமாட்சியம்மன்பேட்டை பகுதியில் பொதுமக்கள் திரண்டதால் பதற்றமான நிலை ஏற்பட்டது.

இதுகுறித்த தகவலறிந்த குடியாத்தம் நகர போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த கார் உள்ளி சாலை வழியாக செல்வது தெரியவந்தது. போலீஸார் அந்த சாலையில் பின்தொடர்ந்து சென்றனர். அதேநேரம், வேலூர் மற்றும் அண்டை மாவட்ட போலீஸார் உஷார் படுத்தப்பட்டனர். மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் வெள்ளை நிற கர்நாடக மாநில பதிவெண் கொண்ட காரை மடக்கி பிடிக்க வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.

இதற்கிடையில், மாதனூர் அருகே குழந்தை ஒன்று தனியாக அழுது கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரியவந்தது. பள்ளிகொண்டா போலீஸார் விரைந்து சென்று பார்த்ததில் அந்த குழந்தை குடியாத்தத்தில் காரில் கடத்தப்பட்ட யோகேஷ் என தெரியவந்தது. பாதுகாப்பாக மீட்கப்பட்ட குழந்தையை பள்ளிகொண்டா காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அங்கு, எஸ்.பி. மயில்வாகனன் விசாரணைக்கு பிறகு குழந்தையை பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர். போலீஸாரின் விசாரணையில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் பதிவெண் போலியானது என தெரிய வந்துள்ளது. குழந்தை கடத்தப்பட்ட 2 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.

ஒருவரை பிடித்து விசாரணை: குடியாத்தத்தில் காரில் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் தப்பி ஓடியவர்களை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். இதில், கிருஷ்ணகிரி அருகே பாலாஜி என்பவரை தனிப்படையினர் நேற்று இரவு பிடித்துள்ளனர். விக்னேஷ் என்பவர் தப்பிவிட்டார். பாலாஜியிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் வேணு குடும்பத்தினரை பழிவாங்க குழந்தையை கடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT