சென்னை: கோயம்பேட்டில் காய்கறி வியாபாரியிடம், கத்தி முனையில் ரூ.45.70 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட விவகாரம் குறித்து, கோயம்பேடு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை, நெற்குன்றம், ஜெயலட்சுமி நகரை சேர்ந்தவர் சாந்தகுமார் (42). இவர், கோயம்பேடு சந்தையில், காய்கறி மொத்த வியாபாரம் செய்கிறார். இவரது கடையில் சின்மயா நகர், 3-வது தெருவை சேர்ந்த நாராயணன் (35) என்பவர் வேலை செய்கிறார்.
இவர், சாந்தகுமாரின் வாடிக்கையாளர்களான சிறு வியாபாரிகளுக்கு காய்கறிகளை தினமும் விநியோகம் செய்து விட்டு, மாலையில் அதற்கான பணத்தை வசூல் செய்து உரிமையாளரிடம் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சாந்தகுமார், அவரது ஊழியரான நாராயணனிடம் கொத்தவால்சாவடி சந்தைக்குச் சென்று அங்கு கடை நடத்தி வரும் வாசிம் என்பவரிடமிருந்து ரூ.45.68 லட்சத்தை வாங்கி வருமாறு அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து, நாராயணன் இருசக்கர வாகனத்தில் கொத்தவால்சாவடி சென்று வாசிமிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு பாரிமுனை வழியாக கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தார். கோயம்பேடு சந்திப்பு அருகே வரும் போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், நாராயணனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி அவரை கீழே தள்ளினர்.
பின்னர், கத்தியை காட்டி மிரட்டி நாராயணன் கையில் இருந்த ரூ.45.70 லட்சத்தை பறித்து தப்பினர். இருப்பினும், நாராயணன் தட்டு தடுமாறி எழுந்து கொள்ளையர்களை இருசக்கர வாகனத்தில் விரட்டினார். மதுரவாயல் எஸ்பிபி கார்டன் அருகே தப்பிய கொள்ளையர்களை மடக்கி பிடித்து கீழே தள்ளினார். கோபம் அடைந்த அவர்கள் எங்களையே பிடிக்க முயல்கிறாயா? என தங்களிடம் இருந்த அரிவாளால் வெட்ட பாய்ந்தனர்.
இதையடுத்து, திருடன்.. திருடன் என நாராயணன் கத்தினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் திரண்டனர். இதையடுத்து, கொள்ளையர்கள் இருவரும், அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டு விட்டு பணத்துடன் தப்பினர்.
இதையடுத்து, பணம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து, கொள்ளையர்கள் விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, அதை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.