கைது செய்யப்பட்ட தனியார் நிறுவன அதிகாரி சுனில்ராஜ் 
க்ரைம்

சென்னை மெட்ரோ ரயிலில் மலேசியா தொழிலதிபரிடம் நகை திருட்டு - தனியார் நிறுவன அதிகாரி கைது

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தபோது மலேசிய நாட்டு தொழிலதிபரிடம் நகை திருடிய தனியார் நிறுவன அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசிய நாட்டில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருபவர் அப்துல்லா என்கின்ற யுகேந்திரன் (41). இவர், அங்கு பெரிய அளவில் மெடிக்கல் ஏஜென்சி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், உறவினரை சந்திக்க அண்மையில் விமானம் மூலம் சென்னைக்கு வந்துள்ளார். மேலும், எல்.ஐ.சி மெட்ரோ நிலையம் செல்வதற்காக, விமான நிலைய மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார்.

சிறிது நேர பயணத்துக்குப் பின் அவர் கொண்டு வந்திருந்த 8 பவுன் தங்க வளையல்கள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய கைப்பை மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த யுகேந்திரன், எல்.ஐ.சி மெட்ரோ நிலையத்தில் இறங்கி அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த அண்ணாசாலை காவல் நிலைய குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் கைப்பற்றி ஆய்வு செய்யப்பட்டது. அதில், தங்க நகைகள் அடங்கிய கைப்பையை திருடிச் சென்றது திருவள்ளூரைச் சேர்ந்த சுனில்ராஜ் (31) என்பது தெரிந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுனில்ராஜ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனித வள மேலாளராக வேலை செய்து வந்துள்ளார். அவரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT