க்ரைம்

ரயிலில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை - திருச்சியில் தன்பாலின சேர்க்கை கும்பல் கைது

செய்திப்பிரிவு

தன்பாலின சேர்க்கை ஆண் விவகாரத்தில் பணம் கேட்டு மிரட்டியதால் திருச்சி அண்ணா பல்கலைக் கழக மாணவர் ரயிலிலிருந்து குதித்து தற்கொலை செய்தார். இதுதொடர்பாக 5 பேர் கும்பலை திருச்சி ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரீசன் என்ற மாரீஸ்வரன் (21). இவரது தாய் ஏற்கெனவே உயிரிழந்து விட்ட நிலையில், தந்தை கருப்பையா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தாய்மாமன் வளர்ப்பில் இருந்து வந்த மாரீசன், அண்ணா பல்கலைக் கழக திருச்சி வளாகத்தில் கணிப்பொறி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

திருச்சியில் தனியார் விடுதியில் தங்கி படித்து வந்த மாரீசனுக்கு, சமூக வலைதளம் மூலம் தன்பாலின ஈடுபாடு கொண்ட அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் (21), முத்து ராஜா (20), பாண்டீஸ்வரன் (21), அந்தோணி சஞ்சய் (20), பாலா (22) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் அவ்வப்போது மறைவிடங்களில் சந்தித்து வந்துள்ளனர். அப்போது, இளங்கோவன் உள்ளிட்ட 5 பேரும், செல்போனில் வீடியோ பதிவு செய்து மாரீசனை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் இருந்து பல்லவன் விரைவு ரயிலில் ஏறி திருச்சிக்கு வந்து கொண்டிருந்த மாரீசன், மண்டையூர் அருகே திடீரென ரயிலில் இருந்து வெளியே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திருச்சி ரயில்வே காவல் ஆய்வாளர் ஷீலா வழக்குப் பதிவு செய்து, மாரீசன் செல்போனில் இருந்த வீடியோ, ஆடியோ ஆதாரங்கள், தற்கொலைக்கு யார் காரணம் என அவர் கைப்பட எழுதிய கடிதம் ஆகியவற்றை கைப் பற்றி, இளங்கோவன் உட்பட 5 பேரையும் நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தார். இதில், அவர்கள் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்ததால், 5 பேரையும் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தார்.

SCROLL FOR NEXT