க்ரைம்

பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் விஷம் குடித்த 3 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை

செய்திப்பிரிவு

அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் மூன்று பேர், ஒரே நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சி அருகேயுள்ள கஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். வார விடுமுறை முடிந்து நேற்று காலை மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். வகுப்புகள் தொடங்கிய சிறிது நேரத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 3 பேர் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்தனர். மூவரும் சாணிப் பவுடரை கரைத்து (விஷம்) குடித்து இருப்பதாக தெரிவித்தனர்.

அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து, 3 பேரையும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாணவிகள் விஷம் குடித்த தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் திரண்டனர். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மாணவிகளின் பெற்றோர் கூறும்போது, “மாணவிகள் 3 பேரும் நன்றாக படிக்க கூடியவர்கள். காலையில் வழக்கமான உற்சாகத்துடன் பள்ளிக்கு கிளம்பிச் சென்றனர். பள்ளியில் மாணவிகளை ஆசிரியை திட்டியதாகவும், அதனால் மனமுடைந்து மூவரும் சாணிப்பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸார் உரிய விசாரணை நடத்த வேண்டும்” என்றனர்.

SCROLL FOR NEXT