ஓசூர்: ஓசூரில் ஆதரவற்றோர் காப்பகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காப்பாளர் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். ஓசூரில் இயங்கிவரும் ஆதரவற்றோர் காப்பகத்தில் மாணவ, மாணவிகள் 33 பேர் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இங்கு 9 வயது மாணவிக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றபோது, மாணவி பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. தகவல் அறிந்து கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் விசாரணை நடத்தினர். இதில், மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவம் வெளியில் தெரியாமல் இருக்க கட்டப்பஞ்சாயத்து நடந்ததும் தெரியவந்தது. மேலும், இதுதொடர்பாக ஓசூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, காப்பாளர்ஷாம் கணேஷை (63) போக்சோ சட்டத்தின் கீழும், கட்டப்பஞ்சாயத்து செய்த ஷாம் கணேஷின் மனைவிஜோஸ்பின் (61), காப்பக ஆசிரியை இந்திரா (36) மற்றும் செல்வராஜ் (63), நாதமுரளி (37) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், காப்பகத்தின் உரிமம் புதுப்பிக்கப்படாமல் செயல்பட்டதும் தெரியவந்தது. இதற்கிடையே இக்காப்பகத்தில் இருந்த மாணவ, மாணவிகள் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர்.