திருவாரூரில் தனது தம்பியின் 3 வயது மகள் உயிரிழந்த விரக்தியில், சிறுமிக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவ மனையை சேதப்படுத்திய புகாரில் திமுக நாகை மாவட்ட துணைச் செயலாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் கொட்டாரக்குடி தொண்டமான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (35). இவரது 3 வயது மகள் சிவ இதழினிக்கு நேற்று முன்தினம் இரவு உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து, திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பிறகு அனைத்து வசதிகளையும் கொண்ட பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி, சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த தையடுத்து, திருவாரூர் கமலாலயக் குளம் அருகேயுள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமி தீவிர அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலன ளிக்காமல் சிவ இதழினி உயிரிழந்தார்.
இதையடுத்து, சிறுமிக்கு முதலாவதாக சிகிச்சை அளித்த தெற்கு வீதியில் உள்ள தனியார் மருத்துவமனையே சிறுமி யின் உயிரிழப்புக்கு காரணம் என்று கருதி, அவரது உறவினர்கள் அந்த மருத்துவமனைக்குச் சென்று தகராறில் ஈடுபட்டனர். அப்போது, மருத்துவமனையின் கவுன்ட்டரில் பொருத் தப்பட்டிருந்த கண்ணாடி, கதவு மற்றும் சில பொருட்கள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன.
இதுகுறித்து மருத்துவ மனை உரிமையாளரான மருத்துவர் அகோரசிவம் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சுதாகரின் அண்ணனும், திமுக நாகை மாவட்ட துணைச் செயலாளருமான மணி வண்ணன் (40) என்பவரை போலீஸார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.