குன்னூரில் 1,500 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவரின் உடலை 4 நாட்களுக்கு பிறகு தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல். இவரது 2-வது மகன் முகமது அனாஸ். குன்னூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அதே பகுதியில் உள்ள ஓட்டலில் பகுதி நேரமாக வேலைக்கு சென்று வந்தார். இவர், கல்லூரி மாணவியை விரும்பி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முகமது அனாஸ் இன்ஸ்டா கிராம் மூலம் தனது நண்பர் மற்றும் காதலித்த பெண்ணுக்கு அனுப்பிய குறுந்தகவலில், ‘உயிர் வாழப் பிடிக்கவில்லை, என்னுடைய பெற்றோரையும், பூனைக்குட்டியையும் நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்’ என்று தெரிவித்திருந்தார். கடந்த 17-ம் தேதி டைகர்ஹில் பகுதியில் உள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழக எஸ்டேட் பகுதியில் உள்ள மரணப்பாறை பகுதிக்கு மது போதையில் முகமது அனாஸ் சென்று, 1,500 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலின் பேரில் அன்றிரவே போலீஸார், வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரவு வெகு நேரமானதால் உடலை மீட்க முடியவில்லை. மறுநாள் மீண்டும் தேடுதல் பணியை தொடங்கினர். தொடர் மழைக்கு மத்தியில் 4 நாட்களாக போராடி, அடர்ந்த வனப் பகுதியில் கிடந்த முகமது அனாஸ் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பிரேத பரிசோதனைக்குப்பின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.