திருச்சி: ராமஜெயம் கொலைவழக்கில் திடீர் திருப்பமாக, உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்ட 2 ரவுடிகளிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபருமான கே.என்.ராமஜெயம் 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி நடைபயிற்சி சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.
தற்போது இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரித்து வருகின்றனர். இதில், சந்தேகத்தின் அடிப்படையில் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திருச்சி ஜே.எம்-6 நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.
சோதனைக்கு ஒப்புக் கொள்ளாத குடவாசல் சண்முகம் என்கிற தென்கோவன் தவிர பிரபல ரவுடிகளான சாமி ரவி, திலீப், சிவா ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர், நாராயணன், சிவா, கணேசன், தினேஷ், கலைவாணன், மாரிமுத்து, செந்தில் ஆகிய 12 பேருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
அதன்பின்னரும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், திருச்சி சரக டிஐஜியாக இருந்த வருண்குமார் தலைமையிலான குழுவினருக்கு வழக்கு விசாரணை மாற்றம் செய்யப்பட்டது. தற்போது சிபிசிஐடி டிஐஜியாக உள்ள வருண்குமார் இவ்வழக்கை விசாரித்து வருகிறார். இதில், ஆயுள் தண்டனை கைதிகளான பாளையங்கோட்டை சிறையில் உள்ள ரவுடி சுடலைமுத்து, சென்னை புழல் சிறையில் உள்ள திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி மண்ணச்சநல்லூர் குணா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
அதன்தொடர்ச்சியாக, திண்டுக்கல்லைச் சேர்ந்த தினேஷ், திருவாரூரை சேர்ந்த மாரிமுத்து ஆகியோரை நேற்று இரவு முதல் காஜாமலை பகுதியில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் வைத்து டிஐஜி வருண்குமார் தலைமையிலான சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்றும்(செப்.20) தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது. விசாரணை நடத்தப்பட்டு வரும் இவர்கள் இருவரும் ஏற்கெனவே உண்மை கண்டறியும் சோதனைக்கு உட் படுத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.