தருமபுரி: தருமபுரியில் அரசு மாணவர் விடுதியில் பழங்குடியின மாணவரை தாக்கிய 17 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவர் திருவரசன் (22).
இவர், தருமபுரி ஒட்டப்பட்டியில் செயல்படும் அம்பேத்கர் அரசு மாணவர் தங்கும் விடுதியில் தங்கி, தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்ஸி. கணிதம் 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். படிப்பு செலவுக்காக, கல்லூரி நேரம் நீங்கலான நேரத்தில் திருவரசன் பேக்கரி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.
கடந்த 17-ம் தேதி இரவு பேக்கரி பணி முடித்துவிட்டு விடுதிக்கு திரும்பியுள்ளார். அப்போது விடுதி மாணவர் ஒருவரிடம் செல்போனுக்கான ஹெட் போனை வாங்கி திருவரசன் பயன்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், மற்றொரு மாணவரின் ஹெட் போன் மாயமானதாகவும், அதற்கு திருவரசன் தான் காரணம் என்றும் கூறி 19 மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், திருவரசனை அறைக்குள் வைத்து இரவு முழுவதும் துன்புறுத்தி வீடியோ எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருவரசன் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட விடுதி மாணவர்கள் 17 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். மேலும், தலைமறைவான 2 மாணவர்களை தேடி வருகின்றனர்.