க்ரைம்

தாம்பரம்: சிட்லப்பாக்கம் ஏரியில் மிதந்த 2 சிறுவர்களின் சடலம் மீட்பு

கோ.கார்த்திக்

தாம்பரம்: தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் ஏரியில் மிதந்த சேலையூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களின் சடலங்களை மீட்ட போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பெரியார் தெரு பின்புறம் உள்ள சிட்லப்பாக்கம் ஏரியில் அடையாளம் தெரியாத இரண்டு சிறுவர்கள் சடலமாக மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற சிட்லபாக்கம் போலீஸார், தீயணைப்பு வீரர்களின் உதவியோடு சிறுவர்களின் உடல்களை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவர்கள் சேலையூர் கண்ணப்பர் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் சஞ்சய் (13) மற்றும் சேலையூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள பெரியார் தெருவை சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகன் லோகேஷ் (13) என்பது தெரியவந்தது. மேலும், சிறுவர்கள் இருவரும் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்கள் ஏரியில் குளித்தபோது தவறுதலாக ஆழமான பகுதிக்கு சென்று உயிரிழந்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் சிறுவர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT