திருச்சி: திருச்சி கே.கே.நகர் அமலாபுரம் காலனியை சேர்ந்தவர் தமிழ்(52). மணிகண்டம் பகுதியில் உள்ள இந்திரா கணேசன் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 13-ம் தேதி கல்லூரி ஆய்வுக் கூடத்தில் இருந்த முதலாமாண்டு மாணவி ஒருவரை, பேராசிரியர் தமிழ் தனது அறைக்கு அழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, அறையில் இருந்து அலறியபடி வெளியே வந்து, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சக மாணவிகளிடம் கூறியுள்ளார்.
பின்னர், இது தொடர்பாக மாணவியின் பெற்றோர், மணிகண்டம் போலீஸில் புகார் அளித்தனர். மாணவிக்கு 17 வயதே ஆவதால், இந்த வழக்கு திருவெறும்பூர் மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர், மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பேராசிரியர் தமிழை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.