சென்னை: மருத்துவம் மற்றும் மின்சார துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.45 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். மருத்துவரான அவரது மனைவியை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை கே.கே நகர், 45-வது தெருவில் வசித்து வருபவர் மதியழகன் (38). தனியார் நிறுவனம் ஒன்றில் மருந்தாளுநராக பணி செய்து வருகிறார். இவருக்கு தொழில் ரீதியாக கடந்த 2016ம் ஆண்டு சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் வான்மதி மற்றும் பினகாஷ் எர்னஸ்ட் (38) ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. இந்நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து, தமிழக மருத்துவத் துறை மற்றும் மின்சார துறைகளில் உயர் பதவியில் உள்ளவர்களை நன்கு தெரியும் என்றும், மருத்துவத் துறை அரசு வேலைக்கு ரூ.7 லட்சம், மின்சாரத் துறை அரசு வேலைக்கு ரூ.3 லட்சம் கொடுத்தால் அந்த வேலைகளை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதை நம்பிய மதியழனன் மற்றும் அவருக்கு தெரிந்தவர்கள் என 15 பேர் சேர்ந்து ரூ.45 லட்சத்து 41 ஆயிரத்தை வான்மதி மற்றும் அவரது கணவர் பினகாஷ் எர்னஸ்ட்யிடம் கொடுத்துள்ளனர். ஆனால், அவர்கள் உறுதி அளித்தபடி அரசு வேலை வாங்கி கொடுக்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றியுள்ளனர். இதில், பாதிக்கப்பட்டவர்கள் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
அதன்படி, போலீலார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பினகாஷ் எர்னஸ்ட் கைது செய்யப்பட்டார். இதனிடையே, மருத்துவரான அவரது மனைவியை போலீஸார் தேடி வருகின்றனர்.