பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளை ஒன்றில் ராணுவ சீருடையில் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் ரூ.20 கோடி மதிப்பிலான தங்க நகைகளையும், ரூ.1 கோடி ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் சந்த்சன் நகரில் பாரத ஸ்டேட் வங்கிக் கிளை இயங்கி வருகிறது. அங்கு நேற்று முன்தினம் மாலை ராணுவ சீருடையில் துப்பாக்கி ஏந்திய 3 பேர் கொண்ட கும்பல் நுழைந்துள்ளது. முகமூடி அணிந்திருந்த அவர்கள் வங்கியின் மேலாளர், காசாளர் உள்ளிட்ட ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, கட்டிப் போட்டுள்ளனர். மற்ற ஊழியர்களை கழிவறைக்குள் அடைத்து வெளியே பூட்டியுள்ளனர்.
பின்னர், மேலாளரை அழைத்துச் சென்று லாக்கரை திறக்கச் சொல்லி, அதிலிருந்த ரூ.1 கோடி ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். பின்னர் தங்க நகைகள் வைக்கப்பட்டுள்ள லாக்கரை திறக்கச் சொல்லி மிரட்டியுள்ளனர். அதை திறக்க மறுத்தபோது, துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து, வங்கி மேலாளர் லாக்கரை திறந்ததும், அதிலிருந்த ரூ. 20 கோடி மதிப்பிலான தங்க நகைகளையும் கொள்ளையடித்துவிட்டு, அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து வங்கி ஊழியர்கள் விஜயபுரா போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீஸார் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, வங்கி ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரித்தனர். மேலும், கொள்ளை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், வங்கியில் கொள்ளையடித்த கும்பல் விஜயபுரா எல்லை வழியாக மகா ராஷ்டிர மாநிலத்துக்குள் நுழைந்தது தெரியவந்தது. மேலும், அவர்கள் காரின் பதிவு எண்ணை மாற்றி, அங்கிருந்து தப்பியுள்ளனர். அவர்கள் மின்சார காரை பயன்படுத்தி உள்ளனர்.
கொள்ளையடித்து விட்டு தப்பிச் செல்லும் வழியில், மகாராஷ்டிராவில் உள்ள பண்டார்பூர் அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளனர். அப்போது உள்ளூர் மக்கள் சுற்றி வளைத்ததால், துப்பாக்கியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கர்நாடக போலீஸாரும் மகாராஷ்டிர போலீஸாரும் இணைந்து வங்கிக் கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கனரா வங்கி கொள்ளை: முன்னதாக, கடந்த ஜூன் மாதம் விஜயபுரா மாவட்டத்தில் கனரா வங்கியில் 59 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். பின்னர், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வங்கியின் முன்னாள் மேலாளர் உள்ளிட்ட 15 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணைக்குப் பின்னர் 35 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.