சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயமடைந்துள்ளனர்.
வெம்பக்கோட்டை அருகே உள்ள கங்கர்செவல்பட்டியில் சத்திரப்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிப் பொருள் கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த ஆலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸிரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ளதால் பட்டாசு உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. இன்று 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஒரு அறையில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரித்தபோது உராய்வு ஏற்பட்டு பட்டாசு மருந்து வெடித்துச் சிதறியுள்ளது. இந்த வெடி விபத்தில் அந்த அறையில் பணியாற்றிக்கொண்டிருந்த வெம்பக்கோட்டை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த கவுரி (50) என்பவர் உயிரிழந்தார்.
மேலும், வெம்பக்கோட்டை கண்டியாபுரத்தைச் சேர்ந்த குமரேசன் (30), மேகலை (21), மாரனேரியைச் சேர்ந்த மாரியம்மாள் (40), அப்பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சினி (39), காளிமுத்து (45), ஜெயலட்சுமி (55) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்த வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆலங்குளம் போலீஸார் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
மேலும், உயிரிழந்த கவுரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீஸார் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.