மயிலாடுதுறை: காதல் தகராறில் இளைஞரை வெட்டிக் கொன்ற 5 பேரை மயிலாடுதுறை போலீஸார் கைது செய்தனர். கொலையைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை அருகேயுள்ள அடியமங்கலம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் குமார் மகன் வைரமுத்து(28). இருசக்கர வாகன பழுது நீக்கும் தொழில் செய்து வந்தார். இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர்.
இவர்களது காதலுக்கு பெண்ணின் தாயார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தகராறு ஏற்பட்டதால், கடந்த 14-ம் தேதி போலீஸார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அந்தப் பெண் வைரமுத்துவை திருமணம் செய்து கொள்வேன் என உறுதியாக கூறியுள்ளார். இதனால், அந்தப் பெண்ணிடம் குடும்பத்தினர் எழுதி வாங்கிக் கொண்டு, அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர், அந்தப் பெண் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வைரமுத்து பணிமுடிந்து மயிலாடுதுறையில் இருந்து வீடு திரும்பியபோது, அடியமங்கலத்தில் ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டது. தகவலறிந்த மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்டாலின், டிஎஸ்பி பாலாஜி மற்றும் போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். பெண்ணின் தாயார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வைரமுத்து குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் வைரமுத்துவின் உறவினர்கள் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
மற்றொரு சகோதரர் தலைமறைவு: இந்தக் கொலை தொடர்பாக வைரமுத்துவின் தாயார் ராஜலட்சுமி அளித்த புகாரின்பேரில் பெண்ணின் சகோதரர் குகன்(24), உறவினர் பாஸ்கர்(42) மற்றும் சுபாஷ்(26), கவியரசன்(23), அன்புநிதி(19) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், பெண்ணின் மற்றொரு சகோதரர் குணால் உள்ளிட்டோரை போலீஸார் தேடி வருகின்றனர்.