சென்னை: பிஹார் இளைஞரை கட்டி வைத்து தாக்கி, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். பிஹாரைச் சேர்ந்த இளைஞர் முகமது ஜூவேத். இவர், சென்னை வடபழனியில் தங்கி கறிக்கடை ஒன்றில் பணி செய்து வருகிறார். இவரை அதே மாநிலத்தைச் சேர்ந்த சிலர் அறையில் அடைத்து, கை, கால்களை கட்டி தாக்கினர். பின்னர், அதை வீடியோவாக எடுத்து சமூகவலை தளங்களில் வெளியிட்டனர்.
இந்த விவகாரம் குறித்து, வடபழனி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், முகமது ஜூவேத்தை, அதே மாநிலத்தைச் சேர்ந்த சவுரவ் தலைமையிலான கும்பல் அடைத்து வைத்து தாக்கி வீடியோ எடுத்தது தெரிந்தது. இதையடுத்து, சவுரவ் கூட்டாளிகளான பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த பைஜன் (18), முகமது டெடர் (22) ஆகிய இருவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சவுரவை போலீஸார் தேடி வருகின்றனர்.
முன்னதாக நடைபெற்ற விசாரணையில், சவுரவ் மற்றும் முகமது ஜூவேத் ஒரே வாடகை அறையில் தங்கி இருந்தது தெரிந்தது. அப்போது, மதுபோதையில் முகமது ஜூவேத், சவுரவை திட்டி உள்ளார். இதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில் பழிவாங்கும் வகையில் முகமது ஜூவேத்தை கட்டி வைத்து தாக்கி அதை வீடியோவாக சவுரவ் வெளியிட்டுள்ளார் என்பது தெரிய வந்தது.