சுனிதா பிரகாஷ் | அவரது கணவர் பிரகாஷ் | வழக்கறிஞர் சிவகுருநாதன் 
க்ரைம்

நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.10.89 கோடி மதிப்பிலான நகை, பணம் மோசடி: சென்னையில் தம்பதி கைது

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.10.89 கோடி தங்க நகைகள் மற்றும் பணம் பெற்று மோசடி செய்ததாக கணவன்- மனைவி கைது செய்யப்பட்டனர். மேலும், உரிமையாளரை மிரட்டல் விடுத்த வழக்கறிஞரும் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை வானகரத்தில் நகைக்கடை நடத்தி வருபவர் ஸ்ரீதேவி (50). இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஜூன் 11-ம் தேதி புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், ”சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் சுனிதா பிரகாஷ் (43), அவரது கணவர் பிரகாஷ் (43) மற்றும் சிலர் எனக்கு அறிமுகமாகினர். அவர்கள் என்னிடம் 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் 2024 டிசம்பர் வரை கடன் அடிப்படையில் சிறிது சிறிதாக ரூ.5.13 கோடி மதிப்புள்ள சுமார் 9.5 கிலோ தங்க நகைகளும், ரூ.1.30 கோடி மதிப்புள்ள வைர நகைகளையும் பெற்றும் கொண்டனர். மேலும், அவர்களிடம் முதலீடு செய்யும் பணத்துக்கு இரட்டிப்பு லாபம் தருவதாக ரூ.4.45 கோடி பெற்றுக் கொண்டனர்.

ஆனால், கடனாக பெற்ற நகைகளையோ, இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி பெற்ற பணத்தையே திருப்பி தரவில்லை. மொத்தம் சுமார் ரூ.10.89 கோடி மதிப்புடைய நகை, பணத்தை பெற்று ஏமாற்றி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணம், நகைகளை திரும்ப பெற்றுத் தர வேண்டும். அதோடு மட்டும் அல்லாமல் நான் கொடுத்த பணம், நகையை திருப்பி கேட்டபோது என்னை மிரட்டிய திருவான்மியூரைச் சேர்ந்த சிவ குரு நாதன் (47) என்ற வழக்கறிஞர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் அருண், மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, கூடுதல் காவல் ஆணையர் ராதிகா, துணை ஆணையர் கீதாஞ்சலி, உதவி ஆணையர் பெனாசிர் பாத்திமா மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா வழக்குப் பதிந்து விசாரித்தார். இதில், நகைக்கடை உரிமையாளர் ஸ்ரீதேவி அளித்த புகார் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, புகாருக்கு உள்ளான சுனிதா பிரகாஷ், அவரது கணவர் பிரகாஷ் மற்றும் வழக்கறிஞர் சிவகுருநாதன் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT