சென்னை: கோயம்பேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தை, திருடி ஓட்டிச்சென்ற ஒடிசா இளைஞரை ஆந்திராவில் வாகன சோதனையின்போது போலீஸார் கைது செய்து பேருந்தை மீட்டனர். கோயம்பேடு பணிமனை வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, திருப்பதி செல்லும் தமிழக அரசு பேருந்து ஒன்று நேற்று முன்தினம் காலை திருடுபோனது. அதிர்ச்சி அடைந்த கோயம்பேடு பேருந்து பணிமனை கிளை மேலாளர் ராம்சிங், சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்கு பதிந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் இளைஞர் ஒருவர் பேருந்தை திருடி, ஆந்திரா நோக்கி ஓட்டிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பேருந்து சென்ற வழித்தடங்களில் உள்ள கேமரா காட்சிகள், திருடப்பட்ட அரசு பேருந்தில் உள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணித்து பின் தொடர்ந்தனர். அப்போது ஆந்திர மாநில போலீஸார், நெல்லூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த தமிழக அரசு பேருந்தை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது பேருந்தை ஓட்டிவந்த இளைஞர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து, பேருந்தை பறிமுதல் செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான் அது கோயம்பேடு பணிமனையிலிருந்து திருடப்பட்ட அரசு பேருந்து என்பது தெரிந்தது.
இதுகுறித்து உடனடியாக அவர்கள் சென்னை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சிஎம்பிடி போலீஸார் ஆந்திரா சென்று, பேருந்தை மீட்டனர். மேலும் பேருந்தை ஓட்டிச் சென்றவர் ஒடிசா மாநிலம், கட்டாக் பகுதியைச் சேர்ந்த ஞானசஞ்சன் சாஹூ (24) என்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் சற்று காது கேளாத, வாய் பேச முடியாத நபர் என்பதும், ஊரை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் பேருந்தை திருடிச் சென்றதும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இவரது பின்னணி தொடர்பாகவும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.