விழுப்புரம்: திண்டிவனம் காவல் நிலையத்தில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட தாக பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மேம்பாலம் கீழே உள்ள பேருந்து நிறுத்தத்தில் கிடங்கல் ராஜன் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் (26) என்பவர் கஞ்சா போதையில் பயணிகளிடம் தகராறு செய்து, பணம் பறிக்க முயன்றுள்ளார். தகவலறிந்து சென்ற காவலர் முருகையனையும் அவர் தாக்கியுள்ளார். தகவலறிந்த போலீஸார் அவரை திண்டிவனம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதையறிந்த அவரது மனைவி மனோகரி (21), சகோதர்கள் பாலாஜி (எ) பாலச்சந்திரன் (22), சேட்டு (எ) பிரதீப் குமார் (27) மற்றும் நண்பர் அருண்பிரகாஷ் (எ) சின்னராசு (20) ஆகியோர் காவல் நிலையத்துக்குச் சென்று ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் பிளேடால் அறுத்துக் கொண்டும், பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொள்வதாக கூறியும் போலீஸாரை மிரட்டியுள்ளனர். பெண் தலைமைக் காவலர் மீனாட்சியின் செல்போன் மற்றும் காவல் நிலையத்தில் இருந்த மேஜை உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தினர்.
அப்போது, காவல் நிலையம் அருகேயுள்ள ரயில்வே மேம்பாலத்தின் மீது ஏறி, அங்கிருந்து கீழே குதித்து தப்பித்துச் செல்ல முயன்ற ராஜேஷுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. பின்னர் அவர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் அனைவரையும் போலீஸார் கட்டுப்படுத்தினர்.
இது தொடர்பாக தலைமைக் காவலர் மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, 5 பேரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதீத கஞ்சா போதையால் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.