சென்னை: வீட்டுமனைகள் தருவதாகக் கூறி 26 பேரிடம் ரூ.3.71 கோடி பணம் பெற்று மோசடி செய்ததாக சகோதரிகள் இருவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். சென்னை தி.நகர் ராமகிருஷ்ணா தெருவில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021 வரை ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது.
இந்நிறுவனத்தின் இயக்குநர்களாக அப்பகுதியை சேர்ந்த சகோதரிகளான அம்சவேணி, லட்சுமி ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இந்நிறுவனம், குறிப்பிட்ட தொகை முதலீடு செய்தால், வீட்டுமனைகள் தருவதாக விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பொதுமக்கள் பலர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்து வந்தனர்.
ஆனால், அவர்கள் உறுதியளித்தபடி வீட்டு மனைகளை வழங்காமலும், முதலீடு செய்த பணத்தை திரும்பக் கொடுக்காமலும் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த 26 பேர், அசோக் நகரில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் 26 பேரிடம் ரூ.3 கோடியே 71 லட்சம் பணம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து சகோதரிகள் இருவரையும் கைது செய்த போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இதுபோல் இந்நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை பறிகொடுத்தவர்கள் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.