கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தில் மதுபோதையில் மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த தந்தை, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு மனைவி மற்றும் 18 வயது, 15 வயது என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் மகள் கல்லூரியில் முதலாம்ஆண்டு படித்து வருகிறார். 15 வயது சிறுமியான மற்றொரு மகள் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மது போதையில் வீட்டுக்கு வந்த தந்தை, 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தார். கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில், அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அந்த சிறுமி சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து குன்னூர் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.