கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையில் குதித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயன்றனர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் குப்பம் புதுப்பேட்டை ஏ.பி. சாலை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமண மூர்த்தி (50). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஜோதி (40), மகள் கிருத்திகா (20). இவர்களுடன் ஜோதியின் தாய் சாரதாம்மாளும் (75) வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று 4 பேரும் கிருஷ்ணகிரி அணைக்கு வந்தனர். அங்கு சிறிய மதகின் முன்பகுதியில் ஒவ்வொருவராக நீரில் குதித்தனர். அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயன்றனர். இதில், கிருத்திகா, ஜோதி ஆகியோர் மீட்கப்பட்டனர். லட்சுமண மூர்த்தி, சாரதாம்மாள் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி அணை போலீஸார், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கிருத்திகா, ஜோதி ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “கிருத்திகாவுக்கு கடந்த வாரம் திருமணம் நிச்சயமான நிலையில், அவருக்கு திருமணத்தில் விருப்பமில்லை. இது தொடர்பாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையில், அனைவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் விசாரித்து வருகிறோம்” என்றனர்.
தற்கொலை எண்ணம்... எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு கிடையாது. தற்கொலை எண்ணத்துக்கு தீர்வு தேட சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -24640000, மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104, ஐகால் உதவி எண் 022-25521111 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.