கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலம், குப்பம் புதுப்பேட்டை ஏ.பி. சாலை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமண மூர்த்தி ( 50). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஜோதி (40). இவர்களின் மகள் கிருத்திகா (20). இவர்களுடன் ஜோதியின் தாய் சாரதாம்மாள் (75) என்பவரும் ஒன்றாக வசித்து வந்தார். இந்நிலையில், இன்று (10-ம் தேதி) காலை 10 மணியளவில் 4 பேரும், கிருஷ்ணகிரி அணைக்கு சுற்றுலா செல்வது போல் வந்தனர்.
அணையின் தண்ணீர் வெளியேறும் சிறிய மதகின் முன்புறம் ஒவ்வொருவராக குதித்துள்ளனர். அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த சிலர், அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில், கிருத்திகா, அவரது தாய் ஜோதியை மீட்டனர். லட்சுமண மூர்த்தி, சாரதாம்மாள் ஆகிய 2 பேரும் நீரில் மூழ்கியதில் இறந்து விட்டனர். தகவலறிந்து வந்த, கிருஷ்ணகிரி அணை போலீஸார், கிருத்திகா, ஜோதியை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, மீட்கப்பட்ட சடலங்களையும் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, விசாரணையில் கிருத்திகாவுக்கு கடந்த வாரம் திருமணம் நிச்சயம் ஆன நிலையில், அதில் அவருக்கு விருப்பமில்லை. இதில், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையில், அனைவரும் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் கிருஷ்ணகிரி அணைக்கு வந்தது தெரிந்தது, என்றனர். இதுதொடர்பாக, கிருஷ்ணகிரி அணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை - தீர்வு இல்லை: தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை. தற்கொலை எண்ணத்துக்கு தீர்வு தேட மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 நேரமும்), சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 நேரமும்), ஐகால் (iCall Pychosocial) உதவி எண் 022-25521111 (திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் 10 மணி வரையில்) எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம்.