சென்னை: ஆன்லைன் வர்த்தக தளத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட குஜராத் இளைஞர் கைது செய்யயப்பட்டுளார். இவர் தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் இதேபோல் கைவரிசை காட்டியுள்ளது அம்பலமாகி உள்ளது.
ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் ஸ்வேதரன்யன் (76). இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஜூனில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், ‘ஆன்லைன் வர்த்தக (டிரேடிங்) தளத்தில் முதலீடு செய்தபோது, போலியான ஆன்லைன் டிரேடிங் தளம் மூலம் ரூ.22.30 கோடியை இழந்து விட்டேன். எனவே, எனது பணத்தை மீட்டு, மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும்’ என புகாரில் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்த காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், மோசடி கும்பல், ஸ்வேதரன்யன் பணத்தில் ரூ.1.4 கோடியை அகமதாபாத் நகரில் உள்ள வங்கி கணக்கு ஒன்றுக்கு மாற்றி இருந்தது தெரியவந்தது.
இதையறிந்து, அங்கு விரைந்த சென்னை சைபர் க்ரைம் போலீஸார், மோசடியில் ஈடுபட்டதாக குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த படேல் ஜே (28) என்பவரை கைது செய்தனர். பின்னர், சென்னை அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட படேல் ஜே மீது தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, டெல்லி, கோவா, பஞ்சாப், ஆந்திர பிரதேசம், உத்திர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 31 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர், கூட்டாளிகளுடன் சேர்ந்து போலி முதலீட்டு செயலிகள், இணையதளங்கள், சமூக ஊடக விளம்பரங்கள் (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப்) மூலம் பொதுமக்களை ஏமாற்றி, விரைவில் அதிக லாபம் கிடைக்கும் என்ற பேராசையை தூண்டி, பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்ய வைத்து கோடிக்கணக்கில் சுருட்டியது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.