போரூர் பகுதியில் டிப்பர் லாரி மோதி 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குன்றத்தூர் பகுதியை சேர்ந்த சாரதா என்பவர் தனது சகோதரியின் மகள் யோக ஸ்ரீயை அய்யப்பந்தாங்கலில் உள்ள பயிற்சி மையத்துக்கு நேற்று காலை 6.30 மணியளவில் கால்பந்தாட்ட பயிற்சிக்காக 2 சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். குன்றத்தூர்- போருர் பிரதான சாலையில் எம்.எஸ்.நகர் என்ற பகுதி அருகே சென்றபோது வேகமாக வந்த டிப்பர் லாரி அவர்கள் மீது மோதி யது. இந்த விபத்தில் வாகனத்தை ஓட்டி சென்ற சாரதாவும். யோகஸ்ரீ-யும் கிழே விழுந்துள்ளனர்.
அப்போது லாரியின் சக்கரம் யோகஸ்ரீயின் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆவடி போக்குவரத்து காவல்துறையினர், காயமடைந்த சாரதாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஓட்டுநர் கைது: தப்பி ஓடிய ஓட்டுநரை மதியம் 3 மணியளவில் போலீஸார் கைது செய்தனர். ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன் சென்னையில் இதே போன்ற சம்பவம் நடைபெற்ற போது காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் நகருக்குள் கனரக வாகனம் செல்ல அனுமதிக்கப்படாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே அப்பகுதி மக்கள், '7 மணிக்குள் சென்று விட வேண்டும் என்பதற்காக ஓட்டுநர் வேகமாக லாரியை இயக்கி விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்' என தெரிவித்தனர்.