கைதானவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார். (அடுத்த படம்) பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள். 
க்ரைம்

சூலூர் அருகே பெண்ணை தாக்கி நகை பறித்த சம்பவம்: 2 பேர் கைது, துப்பாக்கி பறிமுதல்

செய்திப்பிரிவு

கோவை: சூலூர் அருகே சுத்தியலால் பெண்ணை தாக்கி நகை பறித்த வழக்கில் மூவரை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து துப்பாக்கி, 18 தோட்டாக் கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மாவட்டம் சூலூர் சுகந்தி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி மேரி ஜூலியானா(47). மளிகைக் கடை நடத்தி வருகின்றனர்.

கடந்த 28-ம் தேதி மேரி ஜூலியானா கடையில் இருந்தபோது, சிகரெட் வாங்க வந்த இரண்டு பேர், சுத்தியலால் மேரி ஜூலியானாவை தாக்கி 4 பவுன் நகையை பறித்துச் சென்றனர். சூலூர் போலீஸார் வழக்குப்பதிந்து, ராசிபாளையம் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த இருவரை நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் கரூர் மாவட்டம் மணல் மேடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன்(62), பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த விஜய்குமார் தானி(22) என்பதும், கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளிகளாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இருவரும் மேரி ஜூலியானாவை தாக்கி நகை பறித்துச் சென்றது உறுதியானது. இவர்களின் அறையில் இருந்து ஒரு துப்பாக்கி, 18 தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சூலூர் போலீஸார் கூறியதாவது: குணசேரன் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக ஐதராபாத் நகரில் தங்கியிருந்தார். சில ஆண்டு களுக்கு முன்னர் தமிழகத்துக்கு திரும்பிய அவர், கோவையில் ஒரு மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளதால், இங்கு அறை எடுத்து தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

இரு ஆண்டுகளுக்கு முன் கோவில்பாளையத்தில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு காஸ்டிங் நிறுவனத்தில் குணசேகரன் வேலை செய்தபோது, அதேநிறுவனத்தில் பணியாற்றிவந்த பிஹாரைச் சேர்ந்த விக்ரம்குமார்(25) என்ப வருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பிஹார் சென்றுள்ளனர்.

அங்கு வைத்து ரூ.45 ஆயிரத்துக்கு விக்ரம்குமாரிடம் இருந்து துப்பாக்கியை குணசேகரன் வாங்கியுள்ளார். அதை சட்டவிரோதமாக தமிழகத்துக்கு கடத்தி வந்து வைத்துள்ளார். பிஸ்டல் வகையான இது நாட்டுத் துப்பாக்கியாகும். 18 குண்டுகளும் பயன்படுத்தப்படாதவை ஆகும்.

இதையடுத்து, நகைபறிப்பு வழக்குடன், ஆயுத தடைச்சட்டப் பிரிவும் சேர்க்கப்பட்டு குணசேகரன், விஜய்குமார் தானி, விக்ரம்குமார் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டனரா எனவும் விசாரணை நடக்கிறது’’ என்றனர்.கைதானவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார். (அடுத்த படம்) பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள்.

SCROLL FOR NEXT