சென்னை: ஏற்கெனவே 23 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ஒருவர், கத்தியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில், தம்பியுடன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுவண்ணாரப்பேட்டை, ஜீவா நகரைச் சேர்ந்தவர் டேவிட் (28). கூலித் தொழிலாளியான இவர் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி இரவு வேலை முடிந்து அவரது வீட்டின் முன் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் டேவிட்டை திடீரென தாக்கி கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்தால் கத்தியால் தாக்கிவிட்டு, அவர் சட்டைப் பையில் வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தப்பினர்.
இதில், காயமடைந்த டேவிட்டை அவரது குடும்பத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விவகாரம் தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். டேவிட்டை கத்தியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டு தப்பிய புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த லோகநாதன் (31), அவரது தம்பி ராஜி என்ற மஸ்தான் (27), நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த நரேஷ்குமார் (20) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட லோகநாதன் மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஏற்கெனவே 2 கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா, திருட்டு உட்பட 23 குற்ற வழக்குகள் உள்ளதும், ராஜி மீது 1 கொலை வழக்கு உள்ளதும், நரேஷ்குமார் மீது 2 திருட்டு உட்பட 3 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.