குன்றத்தூர்: குன்றத்தூர் காந்தி சாலை, மணிகண்டன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனது தாய் வள்ளியம்மாள் (88) மற்றும் மனைவி அபிதா (59) ஆகியோருடன் வசித்து வருகிறார்.
ராஜேந்திரன் பொழிச்சலூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு (ஆக 31-ம் தேதி) வேலை நிமித்தமாக ராஜேந்திரன் திருமண மண்டபத்திலேயே தங்கிய நிலையில், வீட்டில் அவரது மனைவி மற்றும் தாய் மட்டும் தனியாக இருந்துள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர், நேற்றிரவு 10.30 மணியளவில் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்றுள்ளார்.
அப்போது, வீட்டின் வெளியே உள்ள கழிவறைக்கு செல்ல நடந்து சென்ற அபிதாவை, மர்ம நபர் முகத்தில் ஓங்கி குத்தி நிலை குலையச் செய்துள்ளார். இதில் அபிதா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளர். பின்னர், வீட்டிற்குள் சென்ற மர்ம நபர், அங்கிருந்த மூதாட்டி வள்ளியம்மாளையும் தாக்கி, அவரது கைகளை கட்டிப் போட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 7 சவரன் தங்கச் செயின் மற்றும் 4 சவரன் மதிப்புடைய தங்க வளையல்கள் என்று மொத்தம் 11 சவரன் நகைகளை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக இருவரையும் மீட்டனர். அவர்களில் வள்ளியம்மாளை மட்டும் சிகிச்சைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து குன்றத்தூர் போலீஸார், கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற வீட்டை ஆய்வு செய்தனர்.
பின்னர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீஸார், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தப்பிச் சென்ற கொள்ளையனை தேடி வருகின்றனர். கொள்ளையடித்து சென்ற நபர் இந்தியில் பேசியதால் வட மாநில நபர் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.