திருவள்ளூர் அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீசி இளைஞர் கொலை திருவள்ளூர் கடம்பத்தூர் பகுதியில் மர்ம கும்பலால் இளைஞர் ஒருவர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் மகன் ராஜ்கமல் (28). தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெள்ளவேடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டு, கடம்பத்தூர் அருகே உள்ள அகரம் பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில், ராஜ்கமல் தன் நண்பர் ஒருவருடன் நேற்று முன்தினம் இரவு கடம்பத்தூர் பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் அரிசி மூட்டையை வாங்கி கொண்டு பைக்கில் அகரத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மர்ம கும்பல் ஒன்று, ராஜ்கமல் உள்ளிட்ட இருவரையும் பின் தொடர்ந்து சென்று, இரு இடங்களில் ராஜ்கமல் மற்றும் அவரது நண்பர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளது. அந்த இடங்களில் ராஜ்கமல் உள்ளிட்ட இருவரும் தப்பித்து வேகமாக பைக்கில் சென்றுள்ளனர். அவர்களை விடாமல் துரத்திச் சென்று 3-வது இடமான, கடம்பத்தூர் அடுத்த கசவநல்லாத்தூர் ஏரிக்கரை பகுதியில், மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.
அப்போதும் தப்பிக்க முயற்சி செய்த ராஜ்கமல் மற்றும் அவரது நண்பரை மர்ம கும்பல் ஓட, ஓட விரட்டி சென்று மடக்கியது. பிறகு, அக்கும்பல், ராஜ்கமலை, தலை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியது. மேலும், ராஜ்கமலை வெட்ட வந்தவர்களை தடுக்க முயன்ற அவரது நண்பருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, தகவலறிந்து, சம்பவ இடம் விரைந்த கடம்பத்தூர் போலீஸார், ராஜ்கமலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார், ராஜ்கமல் கொலைக்கு காரணம், முன் விரோதமா? அல்லது வேறு காரணமா? என, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.