தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் தங்கம் கடத்தல் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்த கடத்தலுக்கு சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சிலர் துணை போவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அண்மையில் துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் கன்னட நடிகை கைது செய்யப்பட்டார்.
இவர், கிட்டத்தட்ட ரூ.12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கத்தை பலமுறை தனது விமான பயணத்தின் மூலம் கடத்தியதாக குற்றம்சாட்டப் பட்டது. இந்த கடத்தலுக்கு மத்திய அரசு ஊழியர்கள் சிலர் ஆதாயம் பெற்று உதவியதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியது.
இந்நிலையில், தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சென்னையில் நேற்று காலை பல இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். குறிப்பாக மீனம்பாக்கம், கோயம்பேடு, பூக்கடை, செங்கல்பட்டு உள்பட 6 இடங்களில் சோதனை நடைபெற்றது.
மீனம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பகுதிகளில் சுங்கத்துறை அதிகாரி வீட்டிலும், பூக்கடை பகுதியில் தனியார் நகைக்கடை உரிமையாளர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சோதனையின்போது, முறைகேடு தொடர்பாக முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகளிடம் கேட்டபோது, "சோதனை ஆரம்ப நிலையில் உள்ளதால், அதுதொடர்பான விபரங்களை தற்போது வெளியிட இயலாது. சோதனை நிறைவடைந்த பின்னர் முறைப்படி தெரிவிக்கப்படும்" என்றனர்.