சிவகங்கை: இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் சிவகங்கை பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்டார். சிவகங்கை மஜித் சாலையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(53). பாஜக மாவட்ட வர்த்தக பிரிவுச் செயலாளரான இவர், வாரச்சந்தை சாலையில் இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் கடை நடத்தி வந்தார்.
அங்கு மணிபாரதி என்பவர் பணிபுரிந்தார். இருவரும் ஓய்வுக்காக கடை அருகே வாடகைக்கு அறை எடுத்துத் தங்கினர். அவர்களது அறைக்கு அருகேயுள்ள மற்றொரு அறையில், ‘ட்ரம்செட்’ அடிக்கும் தொழிலாளர்கள் சிலர் தங்கியிருந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தக ராறில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் கீழே விழுந்த சதீஷ்குமார், மணிபாரதி ஆகியோர் படுகாயமடைந்து, சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் உயிரிழந்தார். மணிபாரதி சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, திருப்பத்தூர் அருகே உள்ள ஏரியூர் வடவன்பட்டியைச் சேர்ந்த செந்தமிழ்செல்வன் என்ற ஹரி(19), குறிஞ்சி நகரைச் சேர்ந்த ஆனந்த் (19), மேலூர் அருகேஉள்ள பட்டூரைச் சேர்ந்த அன்பரசன் (25), கண்ணன் (20), அவரது சகோதரர் பூபதி (19)ஆகியோ ரைக் கைது செய்தனர். மேலும், 3 பேரை தேடி வருகின்றனர்.