திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக. 28) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
திருப்பூர் பல்லடம் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. இது 7 தளங்களை கொண்டது. ஆட்சியர், வருவாய் அலுவலர் உட்பட அதிகாரிகளின் அலுவல் அறைகள் மற்றும் பல்வேறு துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் அதிகாரபூர்வ மின்னஞ்சலுக்கு, அறிமுகம் இல்லாத முகவரியில் இருந்து இன்று காலை ஒரு மெயில் வந்துள்ளது. அதில் மதியம் 1.25 மணிக்கு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனுக்கு தகவல் அளித்தார். தொடர்ந்து உதவி ஆணையர் தையல் நாயகி தலைமையில், மாநகர நுண்ணறிவு பிரிவு போலீஸார் மற்றும் வெடிகுண்டை கண்டறியும் போலீஸார் குழு மோப்பநாய் ராபின் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பல்வேறு தளங்களிலும் ஆய்வு செய்தனர்.
காலை 10.40 மணிக்கு துவங்கிய சோதனை, ஆட்சியர் அலுவலகத்தின் 7 தளங்களிலும் உள்ள அலுவலக அறைகள், கழிவறைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து நேற்று மதியம் 1.45 மணிக்கு சோதனை நிறைவடைந்தது.
சோதனையில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. மேலும் மின்னஞ்சல் அனுப்பிய முகவரி தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திலும் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.