க்ரைம்

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் நிபுணர்கள் சோதனை

க.ரமேஷ்

கடலூர்: சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடலூரில் இருந்து வந்திருந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் அண்ணாமலை நகரில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த நிலையில் இன்று (ஆக.28) காலை 10 மணி அளவில் மருத்துவக் கல்லூரி டீன் அலுவலகத்துக்கு ஒரு தொலைபேசி வந்தது. அதில் பேசியவர் மருத்துவக் கல்லூரியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி தொலைபேசியை துண்டித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரியின் டீன் திருப்பதி, அண்ணாமலை நகர் போலீஸாருக்கு தகவல் அளித்தார். காவல் ஆய்வாளர் அம்பேத்கர் மற்றும் போலீஸார் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தகவல் அளித்துவிட்டு, சம்பவ இடத்துக்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து மருத்துவக் கல்லூரி அலுவலர்கள் மற்றும் அதே பகுதியில் உள்ள பல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தவர்களும் உடனே வெளியேறினர். இதனைத் தொடர்ந்து கடலூரில் இருந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் மற்றும் பீட் , லியோ ஆகிய இரண்டு மோப்ப நாய்கள் சம்பவ இடத்திற்கு சென்று மருத்துவக் கல்லூரி டீன அறை மற்றும் மருத்துவக் கல்லூரி அலுவலர்கள் பணியாற்றும் அலுவலகம், பல் மருத்துவமனை, பல் மருத்துவக் கல்லூரி அலுவலகம், ஆய்வகம், கழிவறைகள், ஆடிட்டோரியம், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பூந்தொட்டிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தனி வளாகத்தில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த வெடிகுண்டு மிரட்டலால் அண்ணாமலை நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT