பிரதிநிதித்துவப்படம் 
க்ரைம்

விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 21 கிலோ கஞ்சா: ஆர்.பி.எஃப் போலீஸார் விசாரணை

எம். வேல்சங்கர்

சென்னை: கச்சிகுடாவில் இருந்து எழும்பூருக்கு வந்த விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடைந்த 21 கிலோ கஞ்சாவை ஆர்.பி.எஃப் போலீஸார் கைப்பற்றினர். இதை கடத்திய நபர்கள் தொடர்பாக ஆர்.பி.எஃப் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்.பி.எஃப் காவல் ஆய்வாளர் கே.பி.ஜெபாஸ்டியன் தலைமையில் ஆர்.பி.எஃப் உதவி ஆய்வாளர் கதிரவன், துணை உதவி ஆய்வாளர் அன்புசெல்வன், தலைமை காவலர் கண்ணன் உள்ளிட்ட ஆர்.பி.எஃப் போலீஸார் இன்று காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நிலையத்தின் 8-வது நடைமேடைக்கு இன்று காலை 7 மணிக்கு தெலங்கானா மாநிலம் கச்சிகுடாவில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் வந்தது. இந்த ரயிலின் பொதுபெட்டியில் இரண்டு பைகள் கேட்பாரற்று நெடுநேரம் கிடந்தது. இதை உரிமைக்கோரி பயணிகள் யாரும் பெற முன்வரவில்லை. இதையடுத்து, இந்த பைகளை திறந்துபார்த்தபோது, அதில் 21 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

இதன் மதிப்பு ரூ.10.5 லட்சம் ஆகும். கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி ஆர்.பி.எஃப் அலுவலகத்துக்கு எடுத்துவந்தனர். தொடர்ந்து, கஞ்சா பொட்டலங்கள் மற்றும் இதுதொடர்புடைய ஆவணங்களை மதுவிலக்கு அமலாக்கு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த கஞ்சா பொட்டலங்களை கடத்திய நபர் யார், எங்கிருந்து கடத்தி வந்தார், போலீஸாரை கண்டதும் கஞ்சா பொட்டலங்கள் அடங்கிய பையை வைத்துவிட்டு தப்பிவிட்டாரா என்ற கோணத்தில் ஆர்பிஎஃப் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT