க்ரைம்

விருத்தாசலம் அருகே ரயில் பாதையில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு

செய்திப்பிரிவு

விருத்தாசலம்/திருச்சி: விருத்தாசலம் அருகே நேற்று தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ரயில்வே கிராஸிங்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 மாணவர்கள் லேசான காயமடைந்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வேன் ஒன்று மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

விருத்தாசலம் - உளுந்தூர் பேட்டை இடையே கோ.பூவனூர் என்ற இடத்தில் ரயில்வே கிராஸிங்கை கடக்க முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தவேன், தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் துரிதமாகச் செயல்பட்டு வேனில் இருந்த மாணவர்களை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புற சிகிச்சையாக மருத்துவம் பெற்ற மாணவர்கள் வீடு திரும்பினர்.

இந்நிலையில், விபத்து நடந்த கோ.பூவனுர் கிராமத்தில் தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் பாலக் ராம் நேகி ஆய்வு செய்து, கேட் கீப்பரிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். அதேபோல், விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமியும் விசாரணை மேற்கொண்டார். முதல் கட்ட விசாரணையில், ரயில்வே கேட் மூடப்படுமோ என்ற அச்சத்தில் வேனை வேகமாக இயக்கியதால், வேன் விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.

அதைத்தொடர்ந்து, வேன் ஓட்டுநர் சேகர் என்பவர் மீது விருத்தாசலம் ரயில்வே போலீஸார் கிரிமினல் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இவ்விபத்து தொடர்பாக தென்னக ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.டி.எம்.செந்தமிழ் செல்வன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஓட்டுநரின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டதுடன் மாணவர்களுக்கு சிறியகாயங்கள் ஏற்பட்டன.

அவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது. லெவல் கிராசிங்கில் பணியாளர்கள் அமர்த்தப்பட்டு, கேட்இன்டர்லாக் செய்யப்பட்டு, சிக்னல்களால் பாதுகாக்கப்படு கிறது. கேட்டின் இருபுறமும் வேகத்தடைகளுடன் எச்சரிக்கை பலகைகள் உள்ளன. இவ்விபத்தால் ரயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை. ரயில்வே லெவல் கிராசிங் கேட்களைக் கடக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு, குறிப்பாக வாகன ஓட்டுநர்களுக்கு ரயில்வே வேண்டுகோள் விடுக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT