சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் அதனை கடத்தி வந்த நைஜீரிய நாட்டு இளம் பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களை சுங்க துறை அதிகாரிகள் கடந்த 23-ம் தேதி அதிகாலை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது, கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து, கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று, சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை பரிசோதனை செய்தனர்.
அப்போது ஆப்பிரிக்க நாட்டில் இருந்து, தோகா வழியாக சென்னைக்கு, சுற்றுலா பயணியாக நைஜீரியாவை சேர்ந்த சுமார் 30 வயது இளம்பெண் ஒருவர் வந்தார். அவரை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது சூட்கேஸில் 2 கிலோ போதைப் பொருளை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் சர்வதேச மதிப்பு ரூ.20 கோடி என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை விமானத்தில் வந்த தம்பதியிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள 1,018 கிராம் தங்க கட்டிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.