ஈரோடு: கல்லீரல் விற்பனை செய்த பள்ளிபாளையத்தைச் சேர்ந்த பெண் உடல் நலக் குறைவால் ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் 37 வயது பெண். கணவரை பிரிந்து வாழ்கிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். வீட்டு வேலைகள், கடை உள்ளிட்ட இடங்களில் அவ்வப் போது கூலி வேலை செய்து பிழைத்து வந்தார்.
இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். பரிசோதனையில் அவருக்கு கல்லீரலின் ஒரு பகுதியும், பித்தப்பையில் ஒரு பகுதியும் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
விசாரணையில், கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன்னர் கடன் பிரச்சினை காரணமாக ஈரோட்டை சேர்ந்த ஒரு பெண் மூலம் சென்னைக்கு சென்று கிட்னியை விற்க முயன்றுள்ளார். கிட்னி தேவைப்பட்ட நபருக்கு, இவரது கிட்னி பொருந்தாத நிலையில், வேறு சில பேருக்கு கல்லீரல், பித்தப்பை தேவை என அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு அவர் சம்மதிக்காத நிலையில் கிட்னி பரிசோதனைக்கு ஆன செலவுகளை வழங்கிவிட்டு செல்ல, மருத்துவமனை நிர்வாகம் நிர்பந்தித்துள்ளது.
வேறு வழியின்றி அவர் தனது கல்லீரலின் ஒரு பகுதியை வழங்க சம்மதித்துள்ளார், அதற்கு அவருக்கு ரூ.3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது கல்லீரலின் ஒரு பகுதி அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அப்பெண்ணுக்கு அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதற்கு அவர் சிகிச்சை பெற்றபோது, தனது பித்தப்பையிலும் ஒரு பகுதி எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.