கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள சொக்கம்பாளையம் பகுதியில் நேற்று மதியம் இளைஞர் ஒருவர் போதையில் சாலையில் தள்ளாடியபடியே வந்தார். திடீரென அவர் சாலையில் கிடந்த கற்களை எடுத்து, நடந்து சென்றவர்கள் மீது வீசினார்.
இதில், அங்கு சென்ற சின்னசாமி(65), வேலுமணி, கவிதா, கார்த்திகா ஆகியோர் காயமடைந்தனர். சொக்கம்பாளையத்தைச் சேர்ந்த சகுந்தலா(55) என்பவர் மீது கல் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, சகுந்தலாவின் தலையில் மீண்டும் பெரிய கல்லை தூக்கி போட்டார். அதில் பலத்த காயமடைந்த சகுந்தலா அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், அவரைப் பிடித்து தாக்கினர். பின்னர், அங்கு வந்த அன்னூர் போலீஸார் அந்த இளைஞரைப் பிடித்துச் சென்றனர். சகுந்தலாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. காயமடைந்த சின்னசாமி உள்ளிட்ட 4 பேரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி, பெண்ணை கொலை செய்த இளைஞர் அன்னூரைச் சேர்ந்த குமார் மகன் ரஞ்சித்(18) என்பதும், அவர் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவரைக் கைது செய்தனர்.