அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவரை சக மாணவர் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கொலை செய்த மாணவரின் இன்ஸ்டா சாட் தொடர்பான ஸ்க்ரீன் ஷாட் இணையத்தில் பரவி வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன? - அகமதாபாத் நகரின் கோக்ரா பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் நேற்று சக மாணவரால் கத்தியால் குத்தப்பட்டார். இதில் அந்த மாணவர், படுகாயமடைந்தார். மாணவரை அருகிலிருந்தோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று பள்ளி முன் திரண்ட பெற்றோர், பொதுமக்கள் பள்ளியை சூறையாடினர். சில அசிரியர்கள், ஊழியர்களும் தாக்கப்பட்டனர். இந்நிலையில், கொலையில் ஈடுபட்ட சிறுவனை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சூழலில், அந்தச் சிறுவன் கொலை பற்றி தனது நண்பருடன் பேசியது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்க்ரீன்ஷாட் விவரம்:
நண்பர்: நீ நேற்று யாரையாவது கத்தியால் குத்தினாயா?
குற்றஞ்சாட்டப்பட்ட மாணவன்: ஆம். உனக்கு யார் சொன்னது?
நண்பர்: நாம் இருவருக்கும் தெரிந்த நபர்தான். என்னை தொலைபேசியில் ஒரு நிமிடம் அழைக்கவும்.
குற்றஞ்சாட்டப்பட்ட மாணவன்: முடியாது. என் அண்ணன் இருக்கிறார். அவருக்கு நடந்தது தெரியாது. நான் என்ன செய்தேன் என்று உன்னிடம் யார் சொன்னார்களோ அவனிடம் சென்று சொல், ‘நான் தான் கொலை செய்தேன்’ என்று. அவன் (கொலையான மாணவர்) ‘நீ யார்? உன்னால் என்ன முடியும்?’ என்று கேட்டான். இப்போது தெரிந்ததா?
நண்பன்: இதற்காகவெல்லாம் கொலை செய்வார்களா? ஏதோ அடித்து விட்டிருக்கலாம்.
குற்றஞ்சாட்டப்பட்ட மாணவன்: நடந்தது நடந்துவிட்டது. இதைவிட்டுவிடு.
நண்பன்: சரி உன்னைப் பார்த்துக் கொள். நாம் பேசியதை டெலீட் செய்துவிடு.
இவ்வாறாக அந்த உரையாடல் முடிகிறது. ஒரு கொலை செய்துவிட்டு எந்த சலனமும் இல்லாமல் வீட்டுக்குச் சென்றுவிட்டு, நடந்தது நடந்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு 15 வயது சிறுவனின் எண்ண ஓட்டங்கள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உரையாடல் அடங்கிய ஸ்க்ரீன்ஷாட் குறித்து குழந்தைகள் நல செயற்பாட்டாளர்கள் பலரும், குழந்தைகள், குறிப்பாக பதின் பருவ குழந்தைகளை வளர்ப்பது தொடர்பாக தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
கைதான மாணவர் மீது ஏற்கெனவே பள்ளியில் பல்வேறு புகார்களும் இருப்பதாகத் தெரிகிறது. பள்ளிக்கு மொபைல் ஃபோன் எடுத்துவருவது, மொபைலில் போர்னோகிராபி படங்களைப் பார்ப்பது, மாணவிகளை சீண்டுவது, படிப்பில் கவனமின்மை எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அந்த மாணவர் தற்போது கொலை வழக்கில் கைதாகியுள்ளார்.