சென்னை: சென்னையில் உயர் ரக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையைத் தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தனிப்படை போலீஸார் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருடன் ஒருங்கிணைந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக ஐஸ் அவுஸ் காவல் நிலைய போலீஸார் நேற்று முன்தினம் திருவல்லிக்கேணி, பாரதி சாலை பகுதியில் கண்காணித்தனர்.
அப்போது அங்கு 2 பேர் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்தனர். போலீஸார் அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் உயர்ரக ஓ.ஜி. வகை கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.
எனவே அதை வைத்திருந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் (32), முகமது தவுபிக் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர். கூட்டாளிகளுக்கு வலை தொடர் விசாரணையில் முகமது இப்ராஹிம் செல்போன்களை விற்பனை செய்து வருவதும், முகமது தவுபிக் தனியார் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது.
இவர்கள் கூட்டாக சேர்ந்து வட மாநிலங்களிலிருந்து கஞ்சாவை வாங்கிவந்து சென்னையில் இளைஞர்கள், மாணவர்களுக்கு அதிக விலைக்கு விற்றதும் தெரிய வந்தது. தொடர்ந்து, தலைமறைவாக உள்ள இவர்களது கூட்டாளிகளையும் போலீஸார் தேடி வருகின்றனர்.