சென்னை: ஜாபர்கான்பேட்டையில் நாய் கடித்து சமையல் தொழிலாளி உயிரிழந்துள்ளார். தடுக்க முயன்ற உரிமையாளரையும் நாய் கடித்து குதறியது.
சென்னை, ஜாபர்கான்பேட்டை, வி.எஸ்.எம். கார்டனை சேர்ந்தவர் கருணாகரன் (48). சமையல் தொழிலாளியான இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன் வலது கால் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, சிச்சை பெற்றார். அதன்பின், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். அவ்வப்போது சமையல் வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில், இன்று சமையல் வேலைக்கு சென்று விட்டு, மாலை வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பூங்கொடி (48) என்பவர் வீட்டில் வளர்ந்து வந்த வெளிநாட்டு வகை நாய், கருணாகரனின் வலது தொடையில் திடீரென கடித்தது. நாயை பிடிக்க வந்த அதன் உரிமையாளர் பூங்கொடியையும் கடித்து குதறியது. இதில், பூங்கொடிக்கும் காயம் ஏற்பட்டது.
இதற்கிடையில், நாய் கடிக்கு உள்ளான கருணாகரன் படுகாயங்களுடன் மயங்கி விழுந்ததால், உடனடியாக அவர் மருத்துவ சிகிச்சைக்காக கே.கே.நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பரிசோதித்த மருத்துவர்கள் கருணாகரன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும், காயம் அடைந்த நாயின் உரிமையாளர் பூங்கொடி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுதிமக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக குமரன் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னையில் நாய் கடிக்கு சமையல் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.